Friday, May 30, 2008

டெல்லியை வீழ்த்தி இராஜஸ்தான் இறுதிக்கு தகுதி - IPl கிரிக்கெட்

IPL கிரிக்கெட்டின் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் இராஜஸ்தான் அணி டெல்லி அணியை 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள IPL கிரிக்கெட் போட்டிகளில் முதல் அரை இறுதி ஆட்டம் இன்று டெல்லி மற்றும் இராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் சேவாக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அஸ்நோத்கர் 39 ரன்களும், வாட்சன் 52 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் குவித்தனர். டெல்லி அணியில் மகரூப் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. சேவாக், கம்பீர், தவான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். தில்சான் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். அந்த அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இராஜஸ்தான் அணியில் வாட்சன் மற்றும் முனாப் படேல் இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் அரை இறுதியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடக்கும் சென்னை - பஞ்சாப் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இராஜஸ்தான் அணி வரும் ஜூன் 1 ம் தேதி இறுதி போட்டியில் விளையாடும். இன்றைய ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது 52 ரன்கள் குவித்து 3 விக்கெட்களை வீழ்த்திய ஷேன் வாட்சனுக்கு வழங்கப்பட்டது.

0 comments: