Thursday, July 31, 2008

இலங்கையை பழிதீர்க்குமா இந்தியா?: இன்று 2வது டெஸ்ட்

காலே: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலேயில் துவங்குகிறது. கொழும்பு டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, இன்று துவங்கும் இரண்டாவது டெஸ்டில் பழிதீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொழும்புவில் நடந்த முதல் டெஸ்டில் முரளிதரன், மெண்டிஸ் சுழற்பந்து வீச்சில் நிலைதடுமாறிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.


எழுச்சி தேவை: கொழும்பு டெஸ்டில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களான சேவக், சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் பெரும் ஏமாற்றம் அளித்தனர். இன்று துவங்கும் இரண்டாவது டெஸ்டில் இவர்கள் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் இந்திய அணிக்கு எழுச்சி தேவை. வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிக்க தவறுவது அணிக்கு நெருக்கடியாக உள்ளது. தவிர, சுழல் ஜாம்பவான் அனில் கும்ளே கொழும்புவில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்தார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் முழுத் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இலங்கை அணியை, இந்தியா வீழ்த்த முடியும்.


பீல்டிங் கவலை: இந்திய அணியின் பீல்டிங் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக கொழும்பு டெஸ்டில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய தினேஷ் கார்த்திக், இன்றைய போட்டியில் பொறுப்புடன் விளையாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். காலே போட்டி குறித்து இந்திய கேப்டன் அனில் கும்ளே கூறுகையில்,"" முதல் டெஸ்டில் பங்கேற்ற அதே அணியே இன்றைய போட்டியிலும் களமிறங்கும். விக்கெட் கீப்பிங்கில் தினேஷ் கார்த்திக் ஏமாற்றம் அளித்தது உண்மை. இருப்பினும் தோல்விக்கு அவர் மற்றும் காரணமல்ல. இந்திய வீரர்கள் அனைவரின் செயல்பாடுமே திருப்திகரமாக அமையவில்லை. அதனால் தான் தோல்வி அடைய நேரிட்டது. இன்றைய போட்டியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம்,'' என்றார்.


இலங்கை அதிரடி: இலங்கை அணி பேட்டிங், பவுலிங்கில் வலுவான நிலையில் உள்ளது. கொழும்பு டெஸ்டில் இலங்கை வீரர்கள் நான்கு பேர் சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தனர். இலங்கை பேட்ஸ்மேன்களை விரைவில் வெளியேற்றுவது, இந்திய பந்து வீச்சாளர்களின் முக்கிய கடமையாக உள்ளது.


சுழல் கூட்டணி: இலங்கை அணியின் வெற்றி நாயகர்களாக வலம் வருகின்றனர் முரளிதரன் மற்றும் அஜந்தா மெண்டிஸ். முரளிதரனின் அனுபவ பந்து வீச்சு ஒரு பக்கம் மிரட்ட, அறிமுக போட்டியிலேயே அசத்தி சூப்பர் பார்மில் உள்ளார் மெண்டிஸ். காலே டெஸ்டிலும் இவர்களது மிரட்டல் பந்து வீச்சு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சை பலப்படுத்த அறிமுக வீரராக தம்மிகா பிரசாத் சேர்க்கப்பட்டுள்ளது இலங்கை அணிக்கு கூடுதல் பலம்.


இன்றைய போட்டி குறித்து இலங்கை கேப்டன் ஜெயவர்தனா கூறுகையில்,"" காலே டெஸ்டுக்கு அணியில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் டெஸ்டில் சுழற் பந்து வீச்சில் கலக்கிய முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி, இரண்டாவது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும். வேகப்பந்து வீச்சுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை உறுதியாக கைப்பற்றுவோம்,'' என்றார்.


அணி வருமாறு: இலங்கை: ஜெயவர்தனா (கேப்டன்),வாண்டார்ட், வர்ணபுரா, சங்ககரா, சமரவீரா, சமர சில்வா, தில்ஷன், பிரசன்னா ஜெயவர்தனா(விக்., கீப்பர்), வாஸ், முரளிதரன், மெண்டிஸ், துஷாரா, குலசேகரா, கபுகேதரா , பிரசாத்.


இந்தியா: கும்ளே (கேப்டன்), சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவக், காம்பிர், ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல், ரோகித், முனாப், இஷாந்த் சர்மா, ஆர்.பி. சிங், ஜாகிர் கான், தினேஷ் கார்த்திக், ஓஜா.


டாஸ் முக்கியம்: காலே டெஸ்டில் இந்திய அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியம். காலே ஆடுகளம் குறித்து அதன் பொறுப்பாளர் வர்ணவீரா கூறுகையில்,"" காலே ஆடுகளம் முதல் இரண்டு நாட்கள் வரை வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். மூன்றாவது நாள் முதல் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும். இந்தியா டாஸ் ஜெயிக்க தவறும் பட்சத்தில், மீண்டும் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.

செய்தி : தினமலர்

Monday, July 28, 2008

இந்திய கிரிக்கெட் அணிக்கு கண்டனங்கள்

கொழும்பு டெஸ்டின் மோசமான தோல்வி, இந்திய அணிக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பிய நம்மவர்கள் பரிதாப தோல்விக்கு வழிவகுத்தனர். இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது.

இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ், 239 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை பதிவு செய்தது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை உள்ளடக்கிய இந்திய அணி, இலங்கை மண்ணில் தடுமாறி உள்ளது. இத்தோல்விக்கு ஐந்து காரணங்கள் முக்கியமானவைகளாக அமைந்தன. அவை வருமாறு...



* இந்திய அணி வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ளேவின் சுழற்பந்து வீச்சும் ஒரு முக்கிய காரணமாக அமையும். ஆனால் கொழும்பு டெஸ்டில் கும்ளே 120 ரன்களை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. டெஸ்ட் அரங்கில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தாமல் இருப்பது கும்ளேவுக்கு இது ஐந்தாவது முறை. ஐந்தில் நான்கு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.



* தோனி இல்லாத காரணத்தால், விக்கெட் கீப்பிங் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக் சொதப்பினார். பல முறை கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்ட இவர், இலங்கை 600 ரன்கள் குவிக்க வழி வகுத்தார். தவிர, பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வெறும் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.



* இலங்கை வீரர்கள் வர்ணபுரா, சமரவீரா, ஜெயவர்தனா, தில்ஷன் என நான்கு வீரர்கள் சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களின் அபார ஆட்டத்தால் இலங்கை 600 ரன்களை எட்ட முடிந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை பதிவு செய்த மிகப் பெரிய இலக்கே, இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தது.



* இந்திய அணியின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் சச்சின் (27,12), கங்குலி(23,4), டிராவிட்(14,10) மூவரும் பெரும் ஏமாற்றம் அளித் தனர். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இவர்கள் எடுத்தது வெறும் 90 ரன்களே.



* தங்களது மாயாஜால சுழற்பந்துவீச்சில், இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தது இலங்கையின் முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி. இவர்கள் 20 க்கு 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் தோல்விக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.



கடும் கண்டனம்: இந்திய அணியின் தோல்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் கிரிக்கெட் போர்டு செயலர் நிரஞ்சன் ஷா. இவர் கூறுகையில்,"" கொழும்பு டெஸ்டில் சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண் போன்ற சீனியர் வீரர்களின் செயல்பாடு அணிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை தொடருக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு தான் தயாராயினர். இருப்பினும் மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்து விட்டது.



முதல் போட்டியின் தோல்விக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் பதிலடி கொடுக்க வேண்டும். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக பந்து வீசுவார்கள் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.



அதிபர் பாராட்டு: கொழும்பு டெஸ்டில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு அதிபர் ராஜபக்சே பாராட்டு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், ""இந்திய அணியின் தோல்விக்கு முரளிதரன், மெண்டிசின் சிறப்பான பவுலிங்கே காரணம். வெற்றி பெற்ற அணிக்கும், கேப்டன் ஜெய வர்தனாவுக்கும் பாராட்டுக்கள்,'' என்றார்.


செய்தி : தினமலர்

Saturday, July 26, 2008

இந்தியா இலங்கையிடம் இன்னிங்ஸ் & 239 ரன்களில் தோல்வி

கொழும்பு: கொழும்பு டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொழும்புவில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 600 ரன்கள் குவித்து இலங்கை ஆட்டத்தை டிக்ளர் செய்தது.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு வெறும் 159 ரன்கள் எடுத்திருந்தது. "பாலோ ஆன்' தவிர்க்க 242 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் நான்காவது நாள் களமிறங்கிய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்து, "பாலோ ஆன்' ஆனது. 377 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை வீரர் முரளிதரன் பந்து வீச்சில் துவக்க வீரர் சேவக்(13) விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் இரண்டு இன்னிங்சிலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

செய்தி : தினமலர்

Thursday, July 10, 2008

கிரிக்கெட்டில் அடுத்த கட்டம் - 40 ஓவர் அல்லது இரண்டு இன்னிங்ஸ் கொண்ட 20 ஓவர் போட்டி

40 ஓவர் ஒருநாள் போட்டி அல்லது இரண்டு இன்னிங்ஸ்களைக் கொண்ட இருபதுக்கு20 போட்டி நடத்த ஆலோசனை.
ஒரு நாள் போட்டியில் மாற்றம் செய்யப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ளது. உள்நாட்டு "டுவென்டி-20' போட்டிகள், பார்வையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றதால், ஒரு நாள் போட்டியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டது. இது குறித்து ஐ.சி.சி., மானேஜர் டேவ் ரிச்சர்ட்சன் அளித்த பேட்டி: ஒரு நாள், டெஸ்ட் மற்றும் "டுவென்டி-20' கிரிக்கெட் மூன்றும் முக்கியமாக கருதப்படுகிறது. பாரம்பரியமான டெஸ்ட் போட்டி, வீரர்களின் திறமையை வளர்ப்பதால் என்றும் முதலிடம் தரப்படும். ஒரு நாள் கிரிக்கெட் ஆரம்ப காலத்தில் 60 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. பின்னர் 50 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. உள்ளூர் போட்டியாக அறிமுகமான "டுவென்டி-20' கிரிக்கெட், தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவை கிரிக்கெட் வீரர்கள் பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பை வழங்கி வருகிறது. குறைந்த நேரத்தில் அதிரடி பொழுதுபோக்கை வழங்குகிறது. இதனால் பார்வையாளர்கள் மிகவும் ரசித்து பார்க்கின்றனர். ஐ.பி.எல்., போன்ற அமைப்புகள் தனியார் உரிமையாளர்களுக்கு அணிகளை விற்றுள்ளன. இருப்பினும் கிரிக்கெட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால், பாதிப்பு ஏற்படாது. "டுவென்டி-20' வளர்ந்து வரும் சூழ்நிலையில், ஓரு நாள் போட்டியின் ஈர்ப்பு குறைந்துவிடும் அபாயம் உள்ளது. மக்கள் ரசனைக்கு ஏற்ப, இந்த போட்டியில் மாற்றம் செய்யப்பட வேண்டும். 40 ஓவர், இரண்டு இன்னிங்ஸ் கொண்ட "டுவென்டி-20' போட்டி என்று இரண்டு திட்டங்கள் ஆலோசிக்கப்படும். ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு குறைந்தது 7 மணி நேர கால அவகாசம் தேவைப் படுவதால், இந்த இரண்டு மாற்றங்கள் மட்டுமே சாத்தியமாகும். அதிக அளவிலான ஒரு நாள் போட்டிகள், கிரிக்கெட் வளர்ச்சிக்கு எப்போதும் உதவாது. இவ்வாறு ரிச்சர்ட்சன் கூறினார்.

செய்தி : தினமலர்

Monday, July 7, 2008

ஆசிய கோப்பை கிரிக்கெட் - மெண்டிஸ் சுழலில் இந்தியா கோப்பையை இழந்தது


ஆசிய கோப்பை பைனலில் சொதப்பலாக ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அஜந்தா மெண்டிஸ் சுழலில் பரிதாபமாக சரணடைந்தனர்.100 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி ஆசிய கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. நேற்று கராச்சியில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இந்திய அணியில் பிரவீண் குமாருக்கு பதிலாக ராபின் உத்தப்பா இடம் பெற்றார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி மிகுந்த துணிச்சலுடன் பீல்டிங் தேர்வு செய்தார்.இலங்கை அணிக்கு எடுத்த எடுப்பிலேயே "ஷாக்'. 2வது ஓவரில் இஷாந்த் பந்தை அடித்த ஜெயசூர்யா ஒரு ரன்னுக்காக ஓடி வர முற்பட்டார். பின்னர் "நோ' சொன்னார். அதற்குள் சங்ககரா பாதி தூரம் ஓடி வர, சுரேஷ் ரெய்னா நேரடி "த்ரோ செய்தார். பெயில்ஸ் பறக்க, சங்ககரா(4) பரிதாபமாக ரன் அவுட்டானார். இதற்கு பின் இஷாந்த் சர்மா விக்கெட் வேட்டை நடத்தினார். இவரது வேகத்தில் கேப்டன் ஜெயவர்தனா(11), கபுகேதரா(5), சமரசில்வா(0) அவுட்டாயினர்.


இதையடுத்து 12 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து இலங்கை திணறியது.இந்தச் சூழலில் ஜெயசூர்யா, தில்ஷன் பொறுப்பாக ஆடி அணியை மீட்டனர். வழக்கம் போல் அதிரடி காட்டிய ஜெயசூர்யா, ஆர்.பி.சிங் வீசிய 16வது ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 26 ரன்கள் விளாசினார். ஒரு நாள் அரங்கில் 27வது சதம் கடந்த இவர் 125 ரன்களுக்கு(9 பவுண்டரி, 5 சிக்சர்), சேவக்சுழலில் வீழ்ந்தார். மறுபக்கம் 14வது அரைசதம் கடந்த தில்ஷன் 56 ரன்களுக்கு அவுட்டானார். இலங்கை அணி 49.5 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


மெண்டிஸ் மிரட்டல்: இந்திய அணிக்கு சேவக் அதிரடி துவக்கம் தந்தார். இம்முறை காம்பிர்(6) ஏமாற்றினார். சேவக் 60 ரன்களுக்கு(12 பவுண்டரி), மெண்டிஸ் பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து மிரட்டிய மெண்டிஸ் சுழலில் யுவராஜ் (0), சுரேஷ் ரெய்னா (16) ரோகித் சர்மா (3) வரிசையாக வெளியேறினர். உத்தப்பா 20, கேப்டன் தோனி 49 ரன்கள் எடுத்து அவுட்டாயினர். இந்திய அணி 39.3 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி கோப்பையை கோட்டை விட்டது. இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் மெண்டிஸ் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

Sunday, July 6, 2008

ஆசிய கோப்பை கிரிக்கெட் - கோப்பையை வெல்ல இந்தியா இலங்கை மோதல்

கராச்சி: ஆசிய கோப்பை தொடரில் இன்று நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. கடந்த முறை கோப்பையை இலங்கையிடம் பறிகொடுத்த இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது. ‘சூப்பர் பார்மில்’ இருக்கும் தோனியின் இளம் படை மீண்டும் ஒரு முறை இலங்கையை வீழ்த்தும் என நம்பலாம். முழு பலத்துடன் களமிறங்கும் இலங்கை அணியும் வெற்றியை எளிதில் விட்டுக்கொடுக்காது என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் மோதிய ‘சூப்பர்-4’ போட்டியில் 309 ரன்களை இந்தியா எளிதாக சேஸ் செய்து, அசத்தியது. இந்திய அணி பைனலுக்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போட்டியில் இலங்கை வேண்டுமென்றே விட்டுகொடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் குற்றம்சாட்டினார். இதை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மறுத்துவிட்டன.

துவக்கம் பலம்: இந்திய அணியை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களை தான் அதிகம் நம்பி களமிறங்குகிறது. துவக்க வீரர்கள் சேவக், காம்பிர் அசத்தி வருகின்றனர். இத்தொடர் முழுவதும் அணிக்கு அதிரடியான துவக்கம் தந்துள்ளனர். இவர்களது ‘சூப்பர் பார்ம்’ தொடர்ந்தால் கடந்த 2004ல் கொழும்புவில் நடந்த ஆசிய கோப்பை பைனலில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுக்கலாம். மூன்றாவது வீரராக வரும் ரெய்னா மிரட்டி வருகிறார். 2 சதம், 2 அரைசதம் உட்பட இத்தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் ‘நம்பர்-1’ இடத்தை கைப்பற்றியுள்ளார்.

பொறுப்பான கேப்டன்: கேப்டன் தோனி சூழ்நிலையை உணர்ந்து பொறுப்புடன் பேட் செய்து வருகிறார். ‘மிடில்-ஆர்டரில்’ இவருக்கு யுவராஜ் மற்றும் ரோகித் ஆகியோர் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர்.

பவுலிங் கவலை: இந்திய அணியின் பவுலிங் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அசத்திய இஷாந்த், பிரவீண், ஆர்.பி.சிங் ஆகியோர் சொல்லிக் கொள்ளும்படி பந்துவீசவில்லை. சுழற்பந்துவீச்சில் பியுஸ் சாவ்லா, ஓஜா திணறுகின்றனர். அணியின் பீல்டிங்கும் படுமட்டமாக இருக்கிறது. இக்கட்டான நேரத்தில் சுலப ‘கேட்ச்’சுகளையும் கோட்டைவிட்டு ஏமாற்றுகின்றனர். இன்றைய போட்டியில் பவுலிங், பீல்டிங்கில் எழுச்சி காண வேண்டியது மிகவும் அவசியம்.

ஜெயசூர்யா மிரட்டல்: இலங்கை அணியின் பேட்டிங் பிரமாதமாக இருக்கிறது. ஜெயசூர்யா வாணவேடிக்கை காட்டுகிறார். சங்ககரா இத்தொடரில் இதுவரை மூன்று சதங்கள் பதிவு செய்துள்ளார்.இவர்கள் இருவரையும் விரைவில் வெளியேற்றினால் மட்டுமே இந்திய வீரர்கள் வெற்றியை நினைத்து பார்க்க முடியும். கபுகேதரா, ஜெயவர்தனா, சமரசில்வா, தில்ஷன் என பேட்டிங் படை பலமாக இருக்கிறது. பவுலிங்கில் இந்தியாவை காட்டிலும் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கராச்சி மைதானத்தில் தொடர்ந்து போட்டிகள் நடந்து வருவதால், ஆடுகளம் இன்று சுழலுக்கு அதிகம் ஒத்துழைக்கும். இதனால் முரளிதரன், மெண்டிஸ் போன்றோர் நெருக்கடி தரலாம். இதனை சமாளித்து இந்திய அணி கோப்பை கைப்பற்றும் என நம்புவோம்.

Wednesday, July 2, 2008

ஒருநாள் கிரிக்கெட் - நியூஸிலாந்து புதிய உலக சாதனை

UPDATE : இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இறுதி போட்டியில் பங்கேற்க நாளைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் நியூஸிலாந்து அணி புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இன்று நியூஸிலாந்துக்கும் அயர்லாந்து அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அபாரமாக 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 402 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் மார்ஷல் 161 ரன்களும் மெக்கல்லம் 166 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 29 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதற்கு முன் இந்திய அணியின் 257 ரன்கள் வித்தியாசமே அதிகபடசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.