Tuesday, May 6, 2008

05-05-2008 IPL கிரிக்கெட் - பெங்களூருக்கு அடுத்த தோல்வி

ஸ்ரீசாந்த், சாவ்லா பவுலிங்கில் அசத்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் சொந்த மண்ணில் 126 ரன்களுக்கு ஆல்- அவுட்டாகி ஏமாற்றியது. எளிய இலக்கை சேஸ் செய்த, யுவராஜின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இத்தொடரில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. டிராவிட்டின் ஆட்டம் வெற்றிக்கு உதவாமல் போனது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, யுவராஜை கேப்டனாக கொண்ட பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியுடன் மோதியது. "டாஸ்' வென்ற யுவராஜ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

ஸ்ரீசாந்த் மிரட்டல்: பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக ஜாபர், விராத் கோஹ்லி வந்தனர். முதல் ஓவரை வீசிய ஸ்ரீசாந்த் வேகத்தில் மிரட்டினார். இதில் திணறிப்போன ஜாபர் "டக்' அவுட்டானார். அடுத்த பந்தில் கேமரூன் ஒயிட்டும்(0) "கிளீன் போல்டு' ஆக, ஸ்ரீசாந்த் உற்சாகத்தில் துள்ளினார். இந்நிலையில் காலிஸ்(0) தேவையில்லாமல் ரன்-அவுட்டாக, பெங்களூரு அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமாக காட்சியளித்தது.

டிராவிட் அரைசதம்: அடுத்து வந்த டிராவிட், கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார். துவக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. நான்காவது விக்கெட்டுக்கு இவர்கள் 54 ரன்கள் எடுத்தநிலையில் கோஹ்லி பெவிலியன் திரும்பினார். இவர் 5 பவுண்டரிகள் உட்பட 34 ரன்கள் எடுத்தார்.

பொறுப்புடன் விளையாடிய டிராவிட் அரைசதம் பதிவு செய்து, அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றார். சாவ்லா அபாரம்: மிஸ்பா (8), பிரவீண் (0) விரைவில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். ஒரு சிக்சர், 9 பவுண்டரி விளாசிய டிராவிட் 51 பந்தில் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். கும்ளே (3) ரன்- அவுட்டானார். பெங்களூரு அணி 19.2 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பஞ்சாப் அணி சார்பில் சாவ்லா 3, ஸ்ரீசாந்த் 2 விக்கெட் வீழ்த்தினர்.

சர்வான் அசத்தல்: இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஹோப்ஸ்(5) விரைவில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த சர்வான், மார்சுடன் ஜோடி சேர்ந்தார். கலக்கலாக பேட் செய்த சர்வான், ஸ்டைன் பந்தில் இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். பின்னர் ஜாகிர் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இதையடுத்து கேப்டன் டிராவிட் பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வந்தார். ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

யுவராஜ் "1': பிரவீண் வீசிய 5வதுஓவரில் சர்வான் ஒரு பவுண்டரி, மார்ஷ் ஒரு சிக்சர் என அதிரடி காட்டினர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தநிலையில் சர்வான், பிரவீண் பந்தில் அவுட்டானார். இவர் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உட்பட 31 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் யுவராஜ் (1) இம்முறை சோபிக்கவில்லை. மார்ஷ் 39 ரன்களுக்கு(ஒரு சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டானார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 25 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. திருச்சி அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை மூன்றாம் இடத்தையும், மதுரை நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன

0 comments: