Monday, May 19, 2008

ஷாருக்கானுக்கு தடை : ஐ.சி.சி., அதிரடி


கோல்கட்டா : கோல்கட்டா அணியின் உரிமையாளர் ஷாருக்கான், வீரர்கள் ஓய்விடத்திற்கு அல்லது உடைமாற்றும் இடத்திற்கு செல்லக்கூடாது என ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கமிட்டி தடை விதித்துள்ளது. இந்த முடிவு மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என ஷாருக்கான் கூறியுள்ளார். தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் கோல்கட்டா அணியை ஏலத்தில் எடுத்து இருப்பவர் ஷாருக்கான். கோல்கட்டா அணி விளையாடும் போட்டிகளின் போது எப்போதும் உடன் இருந்து வீரர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரின் இந்தச் செயலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு கமிட்டி தடை விதித்துள்ளது. நேற்று சென்னை அணிக்கெதிராக நடந்த போட்டியில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் தங்கியுள்ள அறைக்கு ஷாருக்கான் சென்றதாக தெரிகிறது. ஐ.சி.சி., விதிகளின் படி கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் அறை அல்லது ஓய்வு எடுக்கும் இடத்திற்கு வேறு யாரும் செல்லக்கூடாது. இது 'மேட்ச் பிக்சிங்' கிற்கு வழிவகுக்கும் என்பதால் அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகளில் ஷாருக்கான் வீரர்களுடன் சேர்ந்து இருக்கக்கூடாது என, ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கமிட்டி தடை விதித்துள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டும் ஐ.சி.சி., விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், தான் இயல்பாகவே கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் இருப்பதாலும், எப்போதும் கிரிக்கெட் வீரர்களுடன் இருப்பதை விரும்புவதாலும், ஐ.சி.சி.,யின் அறிவிப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

0 comments: