Friday, October 17, 2008

டெஸ்ட்டில் அதிக ரன் - சச்சின் புதிய உலக சாதனை



இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார் சாதனை நாயகன் சச்சின். சச்சின் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இது வரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் லாரா, 11,953 ரன்கள் எடுத்து தக்க வைத்திருந்தார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தற்போது அந்த சாதனையை முறிய‌டித்துள்ளார். சச்சின் டெஸ்ட் போட்டிகளில், 12,000 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


முன்னதாக சச்சின் சாதனை படைப்பதற்காக லாரா பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லாரா அளித்திருந்த பேட்டியில், சச்சின், இந்தியாவை இக்கட்டான கால கட்டங்களில் காப்பாற்றியிருக்கிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.

சச்சின் சாதனை புரிந்ததை தொடர்ந்து மொகாலி விளையாட்டரங்கே களை கட்டியது. வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. சக வீரர்கள், சச்சினுக்கு பெவிலியனில் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். ஆஸி., வீரர்கள் முன்னதாக சச்சினை சாதனை படைக்க விடாமல் தடுப்பதே தங்கள் இலக்கு என்று கூறியிருந்தனர். அவர்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்தது.

லாரா 131வது ‌டெஸ்ட் போட்டியில் நிகழ்த்திய சாதனையை, சச்சின் தனது 152வது போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.


டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து முதல் ஏழு இடங்களை பிடித்த வீரர்கள் :

சச்சின் 152 போட்டிகளில் 12000 என்ற இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்ட் ‌போட்டிகளில் 39 சதமும், 50 அரைசதமும் அடித்துள்ளார். வெ. இண்டீஸ் அணியின் லாரா 11953 ரன்கள் அடித்தார். 34 சதமும், 48 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பார்டர், 156 போட்டிகளில் விளையாடி, 11174 ரன்கள் எடுத்துள்ளார். 27 சதமும் 63 அரைசதமும் அடித்துள்ளார். அஸி., வீரர் ஸ்டீவ் வாக் 168 போட்டிகளில் விளையாடி, 10927 ரன்கள் எடுத்துள்ளார், 32 சதமும் 50 அரைசதமும் அடித்துள்ளார். டிராவிட், 127 போட்டிகளில் விளையாடி 10341 ரன்கள் எடுத்துள்ளார், 25 சதமும் 53 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பாண்டிங் , 121 போட்டிகளில் விளையாடி, 10239 ரன்கள் எடுத்துள்ளார், 36 சதமும் 40 அரைசதமும் அடித்துள்ளார். கவாஸ்கர் 125 போட்டிகளில் விளையாடி, 10122 ரன்கள் எடுத்துள்ளார். 34 சதமும் 45 அரைசதமும் அடித்துள்ளார்.

நன்றி : தினமலர்

கும்ப்ளே இல்லை - இந்தியா பேட்டிங் - சாதிப்பாரா சச்சின் - 2வது டெஸ்ட் ஆரம்பம்

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அனில் கும்ப்ளேவுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் அமீத் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் துவங்கு கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைக்க காத்திருக் கிறார் சச்சின். கேப்டன் கும்ளே காயத்தால் அவதிப்படுவது இந்தியாவுக்கு கவலை தரும் விஷயம். பெங்களூரு போட்டி "டிரா' ஆனதையடுத்து இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் இன்று பஞ்சாபிலுள்ள மொகாலியில் துவங்குகிறது.

கடந்த சில நாட்களாக இங்கு நல்ல மழை பெய்து வந்ததையடுத்து போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், நேற்று முதல் இங்கு நல்ல வெயில் அடித்து வருவதால் போட்டி முழுமையாக நடக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.சமீபகாலமாக இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே சர்ச்சைகள் தான் நினைவுக்கு வரும். முதல் டெஸ்டில் கும்ளே-பாண்டிங், ஜாகிர்-ஹாடின் உள்ளிட்ட வீரர்கள் முறைத்து கொண்டாலும், பிரச்னை பெரிதாகவில்லை.

விளாசுவாரா சேவக்?:பெங்களூருவில் சேவக்-காம்பிர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மொகாலியில் இவர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை ஒருகை பார்த்தால் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தலாம்.

சாதனை உறுதி: லாராவின் சாதனையை நெருங்கிவிட்ட சச்சின், அதற்கு தேவையான 15 ரன்களை மொகாலியில் நிச்சயம் எட்டுவார் என எதிர்பார்க்கலாம். டிராவிட், கங்குலி, லட்சுமண் உள்ளிட்ட சீனியர்கள் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள். நெருக்கடியில் இருக்கும் இவர்கள் மொகாலியில் சதம் கடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. பெங்களூருவில் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் அசத்திய ஹர்பஜன், ஜாகிர், மொகாலியிலும் கலக்கலாம்.

ஜாகிர் மிரட்டல்: பந்துவீச்சை பொறுத்தவரை இஷாந்த், ஜாகிர் கூட்டணி மிரட்டி வருகிறது. மற்ற இந்திய ஆடுகளங்களை விட மொகாலி வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் மூன்றாவது வேகமாக முனாப் படேல் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது.

கும்ளே பரிதாபம்: சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் மட்டுமே ஓரளவு சிறப்பாக செயல் பட்டார். ஆனால், கேப்டன் கும்ளே கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்சிலும் சேர்த்து ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியாமல் தவிப்பது பலவீனம்.

பாண்டிங் பலம்: ஆஸ்திரேலிய அணியின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த மாத்யூ ஹைடன் முதல் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தார். இவருடன் துவக்க வீரராக வந்த காடிச் சிறப்பாக விளையாடினார். கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி பெங்களூருவில் சதம் கடந்து அணிக்கு வலுவான ஸ்கோர் பெற்று தந்தனர். இவர்கள் இருவரையும் விரைவில் வெளியேற்றாவிட்டால் சிக்கல் தான். எதிர்கால கேப்டனாக கருதப்படும் மைக்கேல் கிளார்க் பார்மின்றி தவிப்பது பின்னடைவு.

சிடில் அறிமுகம்:பந்துவீச்சில் பிரட் லீ அசத்தினாலும், முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் தலா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் சண்டிகர் லயன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவமும் இவருக்கு கைகொடுக்கலாம். ஸ்டூவர்ட் கிளார்க் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பீட்டர் சிடில் அறிமுகமாகிறார்.மொகாலியில் வெற்றி கணக்கை துவக்கி தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் இந்திய வீரர்கள் முழு திறமையையும் பயன்படுத்தினால் ஆஸ்திரேலியாவை எளிதாக சமாளிக்கலாம்.

இன்னொரு சாதனை: டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற லாராவின் (11,953) சாதனையை முறியடிக்க இந்தியாவின் சச்சினுக்கு (11,939) இன்னும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. டெஸ்ட்(39) மற்றும் ஒரு நாள் போட்டிகளில்(42) அதிக சதம் கடந்த வீரர், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்(16,361) எடுத்தவரான சச்சின் இன்று 4வது சாதனைக்கு தயாராக இருக்கிறார்.



முதல் முறை: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மொகாலியில், டெஸ்ட் போட்டி ஒன்றில் மோதுவது இதுவே முதல் முறை. இங்கு இந்திய அணி 7 டெஸ்டில் பங்கேற்று 2 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. நான்கு டெஸ்ட் "டிரா'வில் முடிந்துள்ளது.

ஆடுகளம் எப்படி?: வழக்கமான இந்திய ஆடுகளங்களில் இருந்து மொகாலி மைதானம் சற்று வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் துவக்கத்தில் வேகங்களுக்கு சாதகமாக இருக்கும். பின்னர் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக மாறிவிடும். இதனால் முதல் 10 ஓவர்களில் கவனமாக விளையாடினால், மிகப் பெரிய ஸ்கோரை எட்டலாம்.

மழை வாய்ப்பு?: மொகாலியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. ஆனாலும் இன்று வானிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என தெரிகிறது. வெயில் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. மாலையில் மேகமூட்டம் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசும் இருக்கும். மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

கும்ளே சந்தேகம்: தோள்பட்டை காயம் முழுமையாக குணமடையாத நிலையில் கும்ளே இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,"" தோள்பட்டை காயம் நன்றாக குணமடைந்து வருகிறது. இரண்டாவது டெஸ்டில் விளையாடுவேனா... இல்லையா... என்பது கடைசி நேரத்தில் தான் தெரியும். மொகாலி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் கைகொடுக்கும் என நம்பலாம். ஆஸ்திரேலிய அணியில் வார்ன் இல்லாதது பின்னடைவு,'' என்றார்.


செய்தி : தினமலர்

Thursday, October 16, 2008

கும்ப்ளேவுக்கு நெருக்கடி முற்றுகின்றது! பாண்டிங், வெங்கச்கர் தாக்கு!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரூவில் நடந்தது. இந்த ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் ஜொலிக்காத போதும் கடைசி நிலை வீரர்கள் கண்ணியமான ஸ்கோரை எட்ட உதவினார்.அதே நேரத்தில் பெளலிங் பிரிவில் இரண்டு அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

இந்திய அணியின் கேப்டனும், சுழப்பந்து வீச்சாளருமான கும்ப்ளே இந்த டெஸ்ட்டில் 51 ஓவர்கள் பந்து வீசியும் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற இயலாமல் வெறும் கையுடன் திரும்பினார். இரண்டாம் இன்னிங்ஸில் தோல்பட்டை வலி காரணாமாக 8 ஓவர் மட்டுமே வீச முடிந்தது.



இந்நிலையில் திலிப் வெங்கச்கர் கும்ப்ளே டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்பே தனது உடல் தகுதி சரியில்லையெனக் கூறி ஆட்டத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மீடியாக்களும் 59 ஓவர் வீசி ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற இயலாததைக் குறை கூறியுள்ளன. ஆஸி கேப்டன் பாண்டிங்கும் கும்ப்ளேவின் பந்து வீச்சி சிறப்பானதாக இல்லை என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இது போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கும்ப்ளே பெங்களூரு டெஸ்ட்டில் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லையென்றும், 600 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய பிட்சில் ஆசியை 430 ரன்களுக்குள் சுருட்டியதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் தொடர் நட்ந்து கொண்டி இருக்கும் சூழலில் இது போன்றவைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

- கிரிக்கெட் ரசிகன்

Friday, October 10, 2008

ஓய்வு ஏன்? முடியை மாற்றுபவனுக்கு இடமாம் எனக்கில்லையாம் - கங்குலி ஆவேசம்

""தேர்வு குழுவினர் என்னை மோசமாக நடத்தினர். இனிமேலும் என்னை பலிகடா ஆக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் ஓய்வை அறிவித்தேன்,'' என்கிறார் கங்குலி. இந்திய அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்தவர் கங்குலி. இவர் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டின் நிர்ப்பந்தம் தான் காரணம் என கூறப்படுகிறது.

நெருக்கடி கொடுத்தனர்: இந்நிலையில் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வு குழுவினர் தன்னை பலிகடா ஆக்கிவிட்டதாக கங்குலி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: தேர்வாளர்களின் கருணையில் விளையாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு தொடருக்கு வாய்ப்பு தருவார்கள். ஆனால், அடுத்த தொடரிலிருந்து நீக்கிவிடுவார்கள். எப்போதும் என்னை தான் "பலிகடா' ஆக்குகிறார்கள். இது நீடிக்க வேண் டாம் என்ற எண்ணத்துடன் ஓய்வு பெற முடிவு செய் தேன். உங்கள் தலையில் துப்பாக்கியை வைத்தால், அதை எவ்வளவு நேரம் தான் பொறுத்து கொள்வீர்கள். 450 போட்டிகள் விளையாடிய பின்பும் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.



தூக்கம் வரவில்லை:

இரானி கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கப்படுவேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. சொல்ல முடியாத வேதனை காரணமாக ஒரு மாதம் எனக்கு தூக்கம் வரவில்லை. புதிய தேர்வு குழுவினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பொறுப்பேற்றிருந்தால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். சிலர் தாங்கள் சேர்த்த ரன்களை விட அதிக முறை "ஹேர் ஸ்டைலை' மாற்றியுள்ளனர். இவர்களுக்கு அணியில் தொடர்ந்து இடம் அளிக் கப்படுகிறது. சிறப்பாக விளையாடிய போதும் என்னை நீக்கிவிட்டார்கள். எனக்குரிய மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

செய்தி : தினமலர்

Thursday, October 9, 2008

நியூஸிலாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ்

பங்களாதேஷில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இன்று மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி நியூஸிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.



முதலில் பேட் செய்த நியூ அணி 50 ஓவரில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஓரம் 57 ரன்களும், வெட்டோரி 30 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷின் முர்தாசா 4 விக்கெட்களையும், ரசாக் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி 45.3 ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பங்களாதேஷின் ஜூனைத் சித்திக் 85 ரன்களும், அஷ்ரபுல் 50* ரன்களும் எடுத்தனர்.



2007 உலகக் கோப்பைக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை பங்களாதேஷ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் முதன் முறையாக மூன்றாம் பவர் பிளேயை பேட்டிங் அணியே தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது. இதில் நியூசிலாந்து அணி 34 முதல் 38 வரை எடுத்து வந்தது. அதில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் அணி 39 வது ஓவர் முதல் பவர் பிளேயை பயன்படுத்தியது.

இந்திய ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் - இன்று ஆரம்பம்


கங்குலி ஓய்வு அறிவித் துள்ள பரபரப்பான சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் ஆரம்பமாகிறது. இந்தியா வெற்றியுடன் துவக்குமா? சச்சின் உலக சாதனை படைப் பாரா? பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி எழுச்சி காணுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் அணி, தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் இன்று பெங்களூருவில் துவங்குகிறது. கும்ளே தலைமையிலான இந்திய அணி இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது. சீனியர் வீரர்கள் கட்டாயம் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளனர். கங்குலியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சச்சின், டிராவிட், லட்சுமண் மனதளவில் சோர்ந்து போயுள்ளனர். தேர்வுக்குழுவின் பார்வை லட்சுமண் மீது அதிகம் உள்ளது. இதனை உணர்ந்து பழைய லட்சுமணாக பிரகாசிக்க வேண்டும். 2001ல் கோல்கட்டா டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்களை குவித்தது போல், இம்முறையும் அசத்த வேண்டும்.


சச்சின் சவால் : டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற லாராவின் சாதனையை தகர்க்க சச்சினுக்கு 77 ரன்கள் தான் தேவைப்படுகிறது. சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில் சாதிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். "சாதனைக்கு தேவையான ரன்களை அவ்வளவு எளிதில் எடுக்க விட மாட்டோம்' என பாண்டிங் வேறு சவால் விடுத் துள்ளார். எனவே, மிகுந்த கவனத்துடன் ஆட வேண்டும். சச்சின்-பிரட் லீ மோதல் விறுவிறுப்பை ஏற்படுத்தலாம்.

டிராவிட்டை பொறுத்தவரை "இந்திய பெருஞ்சுவர்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். சேவக் இன்னொரு முறை 300 ரன்களுக்கு முயற்சிக்கலாம். அடுத்த தலைமுறை கேப்டன் என்பதை தோனி, இப்போட்டியின் மூலம் அழுத்தமாக உணர்த்துவார் என எதிர்பார்க்கலாம்.

கடைசி போட்டி: தான் பிறந்த பெங்களூரு மண்ணில் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ள கும்ளே, வழக்கம் போல் சுழலில் மிரட்டலாம். இவருக்கு பக்கபலமாக ஹர்பஜன் இருப்பதால் கவலையில்லை. வேகத்தில் ஜாகிர் கான், ஆர்.பி.சிங்கின் அனுபவம் கைகொடுக்கும்.



சாப்பல் கணிப்பு: வழக்கமாக ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர்கள் தான் அதிகம் இடம் பெற்று இருப்பர். தற்போதைய அணி கொஞ்சம் இளமையாக உள்ளது. இந்திய அணியை பற்றி நன்கு அறிந்த கிரெக் சாப்பல், துணை பயிற்சியாளராக இருப்பது கூடுதல் "பிளஸ்'. பெங்களூரு ஆடுகளம் முதலிரண்டு நாட்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுக்கும். பின்னர் ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக அமையும் என சாப்பல் கணித்துள்ளார். அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் பாண்டிங், ஹைடனை தான் பெரிதும் சார்ந்துள்ளது. ஹர்பஜன் சுழலில் பாண்டிங் தப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வயிற்று வலியால் அவதிப்பட்ட மைக்கேல் கிளார்க் இன்று பங்கேற்பார் என அறிவிக் கப்பட்டுள்ளது.

ஆல்-ரவுண்டர்' சைமண்ட்ஸ் இல்லாதது அணிக்கு பெருத்த "அடி'. வேகப்புயல் பிரட்லீ மட்டுமே மிரட்டக்கூடியவராக உள்ளார். ஆரம்ப கட்டத்தில் இவரை இந்திய வீரர்கள் சமாளித்து விட்டால், டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

கிடைக்குமா முதல் வெற்றி?: இன்றைய போட்டி நடக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 3 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இரண்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி "டிரா'வில் முடிந்தது.

இங்கு இந்திய அணி 17 டெஸ்ட் போட்டி களில் பங்கேற்று 4 வெற்றி, 6 தோல்விகளை சந்தித்துள்ளது. 7 போட்டிகள் "டிரா'வில் முடிந்துள்ளன. இங்கு நடந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இம்முறை கும்ளே தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அசத்தும் என எதிர்பார்க்கலாம்.

கும்ளே "சுழல் ஜாலம்': இங்கு அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாத னையை கேப்டன் கும்ளே படைத்துள் ளார். சொந்த மண்ணான பெங்களூரு வில் இவர் இதுவரை 8 டெஸ்டில் பங்கேற்று 41 விக்கெட் கைப் பற்றியுள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் கபில் (27), ஹர்பஜன் (21) இருக்கின்றனர்.

நால்வர் கூட்டணிக்கு நெருக்கடி: பாண்டிங்: கங்குலி, டிராவிட், லட்சுமண், சச்சின் அடங்கிய நால்வர் கூட்டணி ஓய்வு நெருக்கடியில் இருப்பது, தங்களுக்கு சாதகமாக அமையும் என ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், ""இந்திய அணியின் சீனியர் வீரர் களுக்கு இது தான் கடைசி டெஸ்ட் தொடர் எனறு மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. கங்குலியை தொடர்ந்து சச்சின் கூட ஓய்வு அறிவிக் கலாம். ஓய்வு பற்றிய செய்திகள் நால்வர் கூட்டணிக்கு பல்வேறு விதத்தில் நெருக்கடி ஏற்படுத்தும். கங்குலி, டிராவிட் பீல்டிங்கில் தடுமாறு கின்றனர். இதனை பயன்படுத்தி பார்டர்- கவாஸ்கர் கோப்பையை வெல்வோம்,'' என்றார்.



சச்சின் 2வது இடம்: பெங்களூருவில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் பெற்றுள் ளார். இவர் 8 டெஸ்டில் பங்கேற்று 2 சதம், 3 அரைசதம் உட்பட 600 ரன்கள் எடுத்து உள்ளார். 2வது இடத்தை சச்சினும் (6 டெஸ்டில், 496 ரன்கள்), 3வது இடத்தை குண்டப்பா விஸ்வநாத்தும் (450 ரன்கள்) பிடித்துள்ளனர்.

மழை வரலாம்: முதல் டெஸ்ட் நடக்கும் பெங்களூருவில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு 60 சதவீதம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்ப நிலை அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்சியசும் இருக்கும் என தெரிகிறது.

ஆடுகளம் எப்படி?: வழக்கமான இந்திய ஆடுகளங் களை போல் பெங்களூரு மைதானமும் பேட்டிங் சொர்க்கபுரியாக இருக்கும். துவக்கத்தில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தலாம். கடைசி இரண்டு நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும். தற்போது வானிலை மந்தமாக இருப்பதால் முதலிரண்டு நாட்களில் வேகங்களும் அசத்த வாய்ப்புள்ளது.

செய்தி : தினமலர்

Saturday, October 4, 2008

பச்சாக்களிடம் பாலோ ஆனைத் தவிர்க்க போராடிய ‘ஜாம்பவான்’ ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய போர்டு பிரசிடெண்ட் அணியுடன் நான்கு நாள் போட்டியில் மோதி வருகிறது. அக்டோபர் 2 ந்தேதி ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய கிரிக்கெட் வாரிய அணி 455 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ரோகித் சர்மா, மற்றும் விராத் கோகில் இருவரும் சதமடித்தனர். பர்த்தீவ் பட்டேல், இர்பான் பதான் இருவரும் அரை சதமடித்தனர்.

இதனை அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள் மளமளவென சரிந்ததன. ஹெய்டன் 20, கட்டிச் 15, பாண்டிங் 41, கிளார்க் 18, ஹட்டின் 34, கிரசியா 0, லீ 0 என தள்ளாடியது. 255 ரன்கள் எடுத்தால் பாலோ ஆனைத் தவிர்க்கலாம் என்ற நிலையில் 218 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து பரிதாபமாகக் காட்சி அளித்தது.

ஆனாலும் ஹஸ்ஸியும், பந்து வீச்சாளர் கிளார்க்கும் இணைந்து ஆஸ்திரேலியாவை அவமானத்தில் இருந்து மீட்டனர். அவர்கள் இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தனர்.




இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்களை இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. இதையும் சேர்த்து இந்திய அணிக்கு 229 ரன்கள் முன்னிலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 1, 2008

இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு : கங்குலி, லக்ஷ்மண், திராவிட்க்கு இடம்!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி, இன்று மும்பையில் தேர்வு செய்யப்பட்டது. அணியில் சீனியர் வீரர் கங்குலி இடம் பெறுவது சந்தேகமாக இருந்தது.

இந்நிலையில் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 9 ம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவராக ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

அணி வீரர்கள்:
அனில் கும்ளே, வீரேந்திர ஷேவாக்; ராகுல் டிராவிட் ; கவுதம் காம்பிர், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, லக்ஷமன், தோனி, ஹர்பஜன்சிங், ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஆர்.பி.சிங், பத்ரிநாத் மற்றும் அமித் மிஸ்ரா.

செய்தி : தினமலர்