Thursday, July 31, 2008

இலங்கையை பழிதீர்க்குமா இந்தியா?: இன்று 2வது டெஸ்ட்

காலே: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலேயில் துவங்குகிறது. கொழும்பு டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, இன்று துவங்கும் இரண்டாவது டெஸ்டில் பழிதீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொழும்புவில் நடந்த முதல் டெஸ்டில் முரளிதரன், மெண்டிஸ் சுழற்பந்து வீச்சில் நிலைதடுமாறிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.


எழுச்சி தேவை: கொழும்பு டெஸ்டில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களான சேவக், சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் பெரும் ஏமாற்றம் அளித்தனர். இன்று துவங்கும் இரண்டாவது டெஸ்டில் இவர்கள் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் இந்திய அணிக்கு எழுச்சி தேவை. வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிக்க தவறுவது அணிக்கு நெருக்கடியாக உள்ளது. தவிர, சுழல் ஜாம்பவான் அனில் கும்ளே கொழும்புவில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்தார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் முழுத் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இலங்கை அணியை, இந்தியா வீழ்த்த முடியும்.


பீல்டிங் கவலை: இந்திய அணியின் பீல்டிங் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக கொழும்பு டெஸ்டில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய தினேஷ் கார்த்திக், இன்றைய போட்டியில் பொறுப்புடன் விளையாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். காலே போட்டி குறித்து இந்திய கேப்டன் அனில் கும்ளே கூறுகையில்,"" முதல் டெஸ்டில் பங்கேற்ற அதே அணியே இன்றைய போட்டியிலும் களமிறங்கும். விக்கெட் கீப்பிங்கில் தினேஷ் கார்த்திக் ஏமாற்றம் அளித்தது உண்மை. இருப்பினும் தோல்விக்கு அவர் மற்றும் காரணமல்ல. இந்திய வீரர்கள் அனைவரின் செயல்பாடுமே திருப்திகரமாக அமையவில்லை. அதனால் தான் தோல்வி அடைய நேரிட்டது. இன்றைய போட்டியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம்,'' என்றார்.


இலங்கை அதிரடி: இலங்கை அணி பேட்டிங், பவுலிங்கில் வலுவான நிலையில் உள்ளது. கொழும்பு டெஸ்டில் இலங்கை வீரர்கள் நான்கு பேர் சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தனர். இலங்கை பேட்ஸ்மேன்களை விரைவில் வெளியேற்றுவது, இந்திய பந்து வீச்சாளர்களின் முக்கிய கடமையாக உள்ளது.


சுழல் கூட்டணி: இலங்கை அணியின் வெற்றி நாயகர்களாக வலம் வருகின்றனர் முரளிதரன் மற்றும் அஜந்தா மெண்டிஸ். முரளிதரனின் அனுபவ பந்து வீச்சு ஒரு பக்கம் மிரட்ட, அறிமுக போட்டியிலேயே அசத்தி சூப்பர் பார்மில் உள்ளார் மெண்டிஸ். காலே டெஸ்டிலும் இவர்களது மிரட்டல் பந்து வீச்சு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சை பலப்படுத்த அறிமுக வீரராக தம்மிகா பிரசாத் சேர்க்கப்பட்டுள்ளது இலங்கை அணிக்கு கூடுதல் பலம்.


இன்றைய போட்டி குறித்து இலங்கை கேப்டன் ஜெயவர்தனா கூறுகையில்,"" காலே டெஸ்டுக்கு அணியில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் டெஸ்டில் சுழற் பந்து வீச்சில் கலக்கிய முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி, இரண்டாவது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும். வேகப்பந்து வீச்சுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை உறுதியாக கைப்பற்றுவோம்,'' என்றார்.


அணி வருமாறு: இலங்கை: ஜெயவர்தனா (கேப்டன்),வாண்டார்ட், வர்ணபுரா, சங்ககரா, சமரவீரா, சமர சில்வா, தில்ஷன், பிரசன்னா ஜெயவர்தனா(விக்., கீப்பர்), வாஸ், முரளிதரன், மெண்டிஸ், துஷாரா, குலசேகரா, கபுகேதரா , பிரசாத்.


இந்தியா: கும்ளே (கேப்டன்), சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவக், காம்பிர், ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல், ரோகித், முனாப், இஷாந்த் சர்மா, ஆர்.பி. சிங், ஜாகிர் கான், தினேஷ் கார்த்திக், ஓஜா.


டாஸ் முக்கியம்: காலே டெஸ்டில் இந்திய அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியம். காலே ஆடுகளம் குறித்து அதன் பொறுப்பாளர் வர்ணவீரா கூறுகையில்,"" காலே ஆடுகளம் முதல் இரண்டு நாட்கள் வரை வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். மூன்றாவது நாள் முதல் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும். இந்தியா டாஸ் ஜெயிக்க தவறும் பட்சத்தில், மீண்டும் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.

செய்தி : தினமலர்

0 comments: