Thursday, July 10, 2008

கிரிக்கெட்டில் அடுத்த கட்டம் - 40 ஓவர் அல்லது இரண்டு இன்னிங்ஸ் கொண்ட 20 ஓவர் போட்டி

40 ஓவர் ஒருநாள் போட்டி அல்லது இரண்டு இன்னிங்ஸ்களைக் கொண்ட இருபதுக்கு20 போட்டி நடத்த ஆலோசனை.
ஒரு நாள் போட்டியில் மாற்றம் செய்யப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ளது. உள்நாட்டு "டுவென்டி-20' போட்டிகள், பார்வையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றதால், ஒரு நாள் போட்டியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டது. இது குறித்து ஐ.சி.சி., மானேஜர் டேவ் ரிச்சர்ட்சன் அளித்த பேட்டி: ஒரு நாள், டெஸ்ட் மற்றும் "டுவென்டி-20' கிரிக்கெட் மூன்றும் முக்கியமாக கருதப்படுகிறது. பாரம்பரியமான டெஸ்ட் போட்டி, வீரர்களின் திறமையை வளர்ப்பதால் என்றும் முதலிடம் தரப்படும். ஒரு நாள் கிரிக்கெட் ஆரம்ப காலத்தில் 60 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. பின்னர் 50 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. உள்ளூர் போட்டியாக அறிமுகமான "டுவென்டி-20' கிரிக்கெட், தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவை கிரிக்கெட் வீரர்கள் பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பை வழங்கி வருகிறது. குறைந்த நேரத்தில் அதிரடி பொழுதுபோக்கை வழங்குகிறது. இதனால் பார்வையாளர்கள் மிகவும் ரசித்து பார்க்கின்றனர். ஐ.பி.எல்., போன்ற அமைப்புகள் தனியார் உரிமையாளர்களுக்கு அணிகளை விற்றுள்ளன. இருப்பினும் கிரிக்கெட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால், பாதிப்பு ஏற்படாது. "டுவென்டி-20' வளர்ந்து வரும் சூழ்நிலையில், ஓரு நாள் போட்டியின் ஈர்ப்பு குறைந்துவிடும் அபாயம் உள்ளது. மக்கள் ரசனைக்கு ஏற்ப, இந்த போட்டியில் மாற்றம் செய்யப்பட வேண்டும். 40 ஓவர், இரண்டு இன்னிங்ஸ் கொண்ட "டுவென்டி-20' போட்டி என்று இரண்டு திட்டங்கள் ஆலோசிக்கப்படும். ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு குறைந்தது 7 மணி நேர கால அவகாசம் தேவைப் படுவதால், இந்த இரண்டு மாற்றங்கள் மட்டுமே சாத்தியமாகும். அதிக அளவிலான ஒரு நாள் போட்டிகள், கிரிக்கெட் வளர்ச்சிக்கு எப்போதும் உதவாது. இவ்வாறு ரிச்சர்ட்சன் கூறினார்.

செய்தி : தினமலர்

0 comments: