Monday, July 28, 2008

இந்திய கிரிக்கெட் அணிக்கு கண்டனங்கள்

கொழும்பு டெஸ்டின் மோசமான தோல்வி, இந்திய அணிக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பிய நம்மவர்கள் பரிதாப தோல்விக்கு வழிவகுத்தனர். இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது.

இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ், 239 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை பதிவு செய்தது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை உள்ளடக்கிய இந்திய அணி, இலங்கை மண்ணில் தடுமாறி உள்ளது. இத்தோல்விக்கு ஐந்து காரணங்கள் முக்கியமானவைகளாக அமைந்தன. அவை வருமாறு...



* இந்திய அணி வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ளேவின் சுழற்பந்து வீச்சும் ஒரு முக்கிய காரணமாக அமையும். ஆனால் கொழும்பு டெஸ்டில் கும்ளே 120 ரன்களை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. டெஸ்ட் அரங்கில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தாமல் இருப்பது கும்ளேவுக்கு இது ஐந்தாவது முறை. ஐந்தில் நான்கு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.



* தோனி இல்லாத காரணத்தால், விக்கெட் கீப்பிங் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக் சொதப்பினார். பல முறை கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்ட இவர், இலங்கை 600 ரன்கள் குவிக்க வழி வகுத்தார். தவிர, பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வெறும் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.



* இலங்கை வீரர்கள் வர்ணபுரா, சமரவீரா, ஜெயவர்தனா, தில்ஷன் என நான்கு வீரர்கள் சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களின் அபார ஆட்டத்தால் இலங்கை 600 ரன்களை எட்ட முடிந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை பதிவு செய்த மிகப் பெரிய இலக்கே, இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தது.



* இந்திய அணியின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் சச்சின் (27,12), கங்குலி(23,4), டிராவிட்(14,10) மூவரும் பெரும் ஏமாற்றம் அளித் தனர். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இவர்கள் எடுத்தது வெறும் 90 ரன்களே.



* தங்களது மாயாஜால சுழற்பந்துவீச்சில், இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தது இலங்கையின் முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி. இவர்கள் 20 க்கு 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் தோல்விக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.



கடும் கண்டனம்: இந்திய அணியின் தோல்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் கிரிக்கெட் போர்டு செயலர் நிரஞ்சன் ஷா. இவர் கூறுகையில்,"" கொழும்பு டெஸ்டில் சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண் போன்ற சீனியர் வீரர்களின் செயல்பாடு அணிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை தொடருக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு தான் தயாராயினர். இருப்பினும் மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்து விட்டது.



முதல் போட்டியின் தோல்விக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் பதிலடி கொடுக்க வேண்டும். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக பந்து வீசுவார்கள் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.



அதிபர் பாராட்டு: கொழும்பு டெஸ்டில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு அதிபர் ராஜபக்சே பாராட்டு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், ""இந்திய அணியின் தோல்விக்கு முரளிதரன், மெண்டிசின் சிறப்பான பவுலிங்கே காரணம். வெற்றி பெற்ற அணிக்கும், கேப்டன் ஜெய வர்தனாவுக்கும் பாராட்டுக்கள்,'' என்றார்.


செய்தி : தினமலர்

1 comments:

said...

நேரத்த வீணாக்காதீங்க. போய் புள்ளகுட்டிய படிக்க வைங்க.