Monday, July 7, 2008

ஆசிய கோப்பை கிரிக்கெட் - மெண்டிஸ் சுழலில் இந்தியா கோப்பையை இழந்தது


ஆசிய கோப்பை பைனலில் சொதப்பலாக ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அஜந்தா மெண்டிஸ் சுழலில் பரிதாபமாக சரணடைந்தனர்.100 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி ஆசிய கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. நேற்று கராச்சியில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இந்திய அணியில் பிரவீண் குமாருக்கு பதிலாக ராபின் உத்தப்பா இடம் பெற்றார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி மிகுந்த துணிச்சலுடன் பீல்டிங் தேர்வு செய்தார்.இலங்கை அணிக்கு எடுத்த எடுப்பிலேயே "ஷாக்'. 2வது ஓவரில் இஷாந்த் பந்தை அடித்த ஜெயசூர்யா ஒரு ரன்னுக்காக ஓடி வர முற்பட்டார். பின்னர் "நோ' சொன்னார். அதற்குள் சங்ககரா பாதி தூரம் ஓடி வர, சுரேஷ் ரெய்னா நேரடி "த்ரோ செய்தார். பெயில்ஸ் பறக்க, சங்ககரா(4) பரிதாபமாக ரன் அவுட்டானார். இதற்கு பின் இஷாந்த் சர்மா விக்கெட் வேட்டை நடத்தினார். இவரது வேகத்தில் கேப்டன் ஜெயவர்தனா(11), கபுகேதரா(5), சமரசில்வா(0) அவுட்டாயினர்.


இதையடுத்து 12 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து இலங்கை திணறியது.இந்தச் சூழலில் ஜெயசூர்யா, தில்ஷன் பொறுப்பாக ஆடி அணியை மீட்டனர். வழக்கம் போல் அதிரடி காட்டிய ஜெயசூர்யா, ஆர்.பி.சிங் வீசிய 16வது ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 26 ரன்கள் விளாசினார். ஒரு நாள் அரங்கில் 27வது சதம் கடந்த இவர் 125 ரன்களுக்கு(9 பவுண்டரி, 5 சிக்சர்), சேவக்சுழலில் வீழ்ந்தார். மறுபக்கம் 14வது அரைசதம் கடந்த தில்ஷன் 56 ரன்களுக்கு அவுட்டானார். இலங்கை அணி 49.5 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


மெண்டிஸ் மிரட்டல்: இந்திய அணிக்கு சேவக் அதிரடி துவக்கம் தந்தார். இம்முறை காம்பிர்(6) ஏமாற்றினார். சேவக் 60 ரன்களுக்கு(12 பவுண்டரி), மெண்டிஸ் பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து மிரட்டிய மெண்டிஸ் சுழலில் யுவராஜ் (0), சுரேஷ் ரெய்னா (16) ரோகித் சர்மா (3) வரிசையாக வெளியேறினர். உத்தப்பா 20, கேப்டன் தோனி 49 ரன்கள் எடுத்து அவுட்டாயினர். இந்திய அணி 39.3 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி கோப்பையை கோட்டை விட்டது. இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் மெண்டிஸ் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

2 comments:

said...

மென்டிஸ் இல்லைன்னா கதை கிழஞ்சுது...அதே போல ஜெயசூரிய அங்கிள் இல்லைன்னா மச் கேள்விக்குறிதான்...

said...

அண்ணே இலங்கை ஆசிய கோப்பையை வின் பண்ணிடுச்சு ஆனா,நாட்டு நிலவரம் ஆசியாவில கேவலமான நிலமைல இருக்கு...:(