Sunday, July 6, 2008

ஆசிய கோப்பை கிரிக்கெட் - கோப்பையை வெல்ல இந்தியா இலங்கை மோதல்

கராச்சி: ஆசிய கோப்பை தொடரில் இன்று நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. கடந்த முறை கோப்பையை இலங்கையிடம் பறிகொடுத்த இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது. ‘சூப்பர் பார்மில்’ இருக்கும் தோனியின் இளம் படை மீண்டும் ஒரு முறை இலங்கையை வீழ்த்தும் என நம்பலாம். முழு பலத்துடன் களமிறங்கும் இலங்கை அணியும் வெற்றியை எளிதில் விட்டுக்கொடுக்காது என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் மோதிய ‘சூப்பர்-4’ போட்டியில் 309 ரன்களை இந்தியா எளிதாக சேஸ் செய்து, அசத்தியது. இந்திய அணி பைனலுக்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போட்டியில் இலங்கை வேண்டுமென்றே விட்டுகொடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் குற்றம்சாட்டினார். இதை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மறுத்துவிட்டன.

துவக்கம் பலம்: இந்திய அணியை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களை தான் அதிகம் நம்பி களமிறங்குகிறது. துவக்க வீரர்கள் சேவக், காம்பிர் அசத்தி வருகின்றனர். இத்தொடர் முழுவதும் அணிக்கு அதிரடியான துவக்கம் தந்துள்ளனர். இவர்களது ‘சூப்பர் பார்ம்’ தொடர்ந்தால் கடந்த 2004ல் கொழும்புவில் நடந்த ஆசிய கோப்பை பைனலில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுக்கலாம். மூன்றாவது வீரராக வரும் ரெய்னா மிரட்டி வருகிறார். 2 சதம், 2 அரைசதம் உட்பட இத்தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் ‘நம்பர்-1’ இடத்தை கைப்பற்றியுள்ளார்.

பொறுப்பான கேப்டன்: கேப்டன் தோனி சூழ்நிலையை உணர்ந்து பொறுப்புடன் பேட் செய்து வருகிறார். ‘மிடில்-ஆர்டரில்’ இவருக்கு யுவராஜ் மற்றும் ரோகித் ஆகியோர் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர்.

பவுலிங் கவலை: இந்திய அணியின் பவுலிங் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அசத்திய இஷாந்த், பிரவீண், ஆர்.பி.சிங் ஆகியோர் சொல்லிக் கொள்ளும்படி பந்துவீசவில்லை. சுழற்பந்துவீச்சில் பியுஸ் சாவ்லா, ஓஜா திணறுகின்றனர். அணியின் பீல்டிங்கும் படுமட்டமாக இருக்கிறது. இக்கட்டான நேரத்தில் சுலப ‘கேட்ச்’சுகளையும் கோட்டைவிட்டு ஏமாற்றுகின்றனர். இன்றைய போட்டியில் பவுலிங், பீல்டிங்கில் எழுச்சி காண வேண்டியது மிகவும் அவசியம்.

ஜெயசூர்யா மிரட்டல்: இலங்கை அணியின் பேட்டிங் பிரமாதமாக இருக்கிறது. ஜெயசூர்யா வாணவேடிக்கை காட்டுகிறார். சங்ககரா இத்தொடரில் இதுவரை மூன்று சதங்கள் பதிவு செய்துள்ளார்.இவர்கள் இருவரையும் விரைவில் வெளியேற்றினால் மட்டுமே இந்திய வீரர்கள் வெற்றியை நினைத்து பார்க்க முடியும். கபுகேதரா, ஜெயவர்தனா, சமரசில்வா, தில்ஷன் என பேட்டிங் படை பலமாக இருக்கிறது. பவுலிங்கில் இந்தியாவை காட்டிலும் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கராச்சி மைதானத்தில் தொடர்ந்து போட்டிகள் நடந்து வருவதால், ஆடுகளம் இன்று சுழலுக்கு அதிகம் ஒத்துழைக்கும். இதனால் முரளிதரன், மெண்டிஸ் போன்றோர் நெருக்கடி தரலாம். இதனை சமாளித்து இந்திய அணி கோப்பை கைப்பற்றும் என நம்புவோம்.

0 comments: