Thursday, October 9, 2008

இந்திய ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் - இன்று ஆரம்பம்


கங்குலி ஓய்வு அறிவித் துள்ள பரபரப்பான சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் ஆரம்பமாகிறது. இந்தியா வெற்றியுடன் துவக்குமா? சச்சின் உலக சாதனை படைப் பாரா? பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி எழுச்சி காணுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் அணி, தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் இன்று பெங்களூருவில் துவங்குகிறது. கும்ளே தலைமையிலான இந்திய அணி இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது. சீனியர் வீரர்கள் கட்டாயம் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளனர். கங்குலியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சச்சின், டிராவிட், லட்சுமண் மனதளவில் சோர்ந்து போயுள்ளனர். தேர்வுக்குழுவின் பார்வை லட்சுமண் மீது அதிகம் உள்ளது. இதனை உணர்ந்து பழைய லட்சுமணாக பிரகாசிக்க வேண்டும். 2001ல் கோல்கட்டா டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்களை குவித்தது போல், இம்முறையும் அசத்த வேண்டும்.


சச்சின் சவால் : டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற லாராவின் சாதனையை தகர்க்க சச்சினுக்கு 77 ரன்கள் தான் தேவைப்படுகிறது. சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில் சாதிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். "சாதனைக்கு தேவையான ரன்களை அவ்வளவு எளிதில் எடுக்க விட மாட்டோம்' என பாண்டிங் வேறு சவால் விடுத் துள்ளார். எனவே, மிகுந்த கவனத்துடன் ஆட வேண்டும். சச்சின்-பிரட் லீ மோதல் விறுவிறுப்பை ஏற்படுத்தலாம்.

டிராவிட்டை பொறுத்தவரை "இந்திய பெருஞ்சுவர்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். சேவக் இன்னொரு முறை 300 ரன்களுக்கு முயற்சிக்கலாம். அடுத்த தலைமுறை கேப்டன் என்பதை தோனி, இப்போட்டியின் மூலம் அழுத்தமாக உணர்த்துவார் என எதிர்பார்க்கலாம்.

கடைசி போட்டி: தான் பிறந்த பெங்களூரு மண்ணில் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ள கும்ளே, வழக்கம் போல் சுழலில் மிரட்டலாம். இவருக்கு பக்கபலமாக ஹர்பஜன் இருப்பதால் கவலையில்லை. வேகத்தில் ஜாகிர் கான், ஆர்.பி.சிங்கின் அனுபவம் கைகொடுக்கும்.



சாப்பல் கணிப்பு: வழக்கமாக ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர்கள் தான் அதிகம் இடம் பெற்று இருப்பர். தற்போதைய அணி கொஞ்சம் இளமையாக உள்ளது. இந்திய அணியை பற்றி நன்கு அறிந்த கிரெக் சாப்பல், துணை பயிற்சியாளராக இருப்பது கூடுதல் "பிளஸ்'. பெங்களூரு ஆடுகளம் முதலிரண்டு நாட்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுக்கும். பின்னர் ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக அமையும் என சாப்பல் கணித்துள்ளார். அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் பாண்டிங், ஹைடனை தான் பெரிதும் சார்ந்துள்ளது. ஹர்பஜன் சுழலில் பாண்டிங் தப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வயிற்று வலியால் அவதிப்பட்ட மைக்கேல் கிளார்க் இன்று பங்கேற்பார் என அறிவிக் கப்பட்டுள்ளது.

ஆல்-ரவுண்டர்' சைமண்ட்ஸ் இல்லாதது அணிக்கு பெருத்த "அடி'. வேகப்புயல் பிரட்லீ மட்டுமே மிரட்டக்கூடியவராக உள்ளார். ஆரம்ப கட்டத்தில் இவரை இந்திய வீரர்கள் சமாளித்து விட்டால், டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

கிடைக்குமா முதல் வெற்றி?: இன்றைய போட்டி நடக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 3 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இரண்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி "டிரா'வில் முடிந்தது.

இங்கு இந்திய அணி 17 டெஸ்ட் போட்டி களில் பங்கேற்று 4 வெற்றி, 6 தோல்விகளை சந்தித்துள்ளது. 7 போட்டிகள் "டிரா'வில் முடிந்துள்ளன. இங்கு நடந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இம்முறை கும்ளே தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அசத்தும் என எதிர்பார்க்கலாம்.

கும்ளே "சுழல் ஜாலம்': இங்கு அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாத னையை கேப்டன் கும்ளே படைத்துள் ளார். சொந்த மண்ணான பெங்களூரு வில் இவர் இதுவரை 8 டெஸ்டில் பங்கேற்று 41 விக்கெட் கைப் பற்றியுள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் கபில் (27), ஹர்பஜன் (21) இருக்கின்றனர்.

நால்வர் கூட்டணிக்கு நெருக்கடி: பாண்டிங்: கங்குலி, டிராவிட், லட்சுமண், சச்சின் அடங்கிய நால்வர் கூட்டணி ஓய்வு நெருக்கடியில் இருப்பது, தங்களுக்கு சாதகமாக அமையும் என ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், ""இந்திய அணியின் சீனியர் வீரர் களுக்கு இது தான் கடைசி டெஸ்ட் தொடர் எனறு மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. கங்குலியை தொடர்ந்து சச்சின் கூட ஓய்வு அறிவிக் கலாம். ஓய்வு பற்றிய செய்திகள் நால்வர் கூட்டணிக்கு பல்வேறு விதத்தில் நெருக்கடி ஏற்படுத்தும். கங்குலி, டிராவிட் பீல்டிங்கில் தடுமாறு கின்றனர். இதனை பயன்படுத்தி பார்டர்- கவாஸ்கர் கோப்பையை வெல்வோம்,'' என்றார்.



சச்சின் 2வது இடம்: பெங்களூருவில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் பெற்றுள் ளார். இவர் 8 டெஸ்டில் பங்கேற்று 2 சதம், 3 அரைசதம் உட்பட 600 ரன்கள் எடுத்து உள்ளார். 2வது இடத்தை சச்சினும் (6 டெஸ்டில், 496 ரன்கள்), 3வது இடத்தை குண்டப்பா விஸ்வநாத்தும் (450 ரன்கள்) பிடித்துள்ளனர்.

மழை வரலாம்: முதல் டெஸ்ட் நடக்கும் பெங்களூருவில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு 60 சதவீதம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்ப நிலை அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்சியசும் இருக்கும் என தெரிகிறது.

ஆடுகளம் எப்படி?: வழக்கமான இந்திய ஆடுகளங் களை போல் பெங்களூரு மைதானமும் பேட்டிங் சொர்க்கபுரியாக இருக்கும். துவக்கத்தில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தலாம். கடைசி இரண்டு நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும். தற்போது வானிலை மந்தமாக இருப்பதால் முதலிரண்டு நாட்களில் வேகங்களும் அசத்த வாய்ப்புள்ளது.

செய்தி : தினமலர்

0 comments: