Friday, October 17, 2008

கும்ப்ளே இல்லை - இந்தியா பேட்டிங் - சாதிப்பாரா சச்சின் - 2வது டெஸ்ட் ஆரம்பம்

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அனில் கும்ப்ளேவுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் அமீத் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் துவங்கு கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைக்க காத்திருக் கிறார் சச்சின். கேப்டன் கும்ளே காயத்தால் அவதிப்படுவது இந்தியாவுக்கு கவலை தரும் விஷயம். பெங்களூரு போட்டி "டிரா' ஆனதையடுத்து இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் இன்று பஞ்சாபிலுள்ள மொகாலியில் துவங்குகிறது.

கடந்த சில நாட்களாக இங்கு நல்ல மழை பெய்து வந்ததையடுத்து போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், நேற்று முதல் இங்கு நல்ல வெயில் அடித்து வருவதால் போட்டி முழுமையாக நடக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.சமீபகாலமாக இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே சர்ச்சைகள் தான் நினைவுக்கு வரும். முதல் டெஸ்டில் கும்ளே-பாண்டிங், ஜாகிர்-ஹாடின் உள்ளிட்ட வீரர்கள் முறைத்து கொண்டாலும், பிரச்னை பெரிதாகவில்லை.

விளாசுவாரா சேவக்?:பெங்களூருவில் சேவக்-காம்பிர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மொகாலியில் இவர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை ஒருகை பார்த்தால் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தலாம்.

சாதனை உறுதி: லாராவின் சாதனையை நெருங்கிவிட்ட சச்சின், அதற்கு தேவையான 15 ரன்களை மொகாலியில் நிச்சயம் எட்டுவார் என எதிர்பார்க்கலாம். டிராவிட், கங்குலி, லட்சுமண் உள்ளிட்ட சீனியர்கள் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள். நெருக்கடியில் இருக்கும் இவர்கள் மொகாலியில் சதம் கடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. பெங்களூருவில் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் அசத்திய ஹர்பஜன், ஜாகிர், மொகாலியிலும் கலக்கலாம்.

ஜாகிர் மிரட்டல்: பந்துவீச்சை பொறுத்தவரை இஷாந்த், ஜாகிர் கூட்டணி மிரட்டி வருகிறது. மற்ற இந்திய ஆடுகளங்களை விட மொகாலி வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் மூன்றாவது வேகமாக முனாப் படேல் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது.

கும்ளே பரிதாபம்: சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் மட்டுமே ஓரளவு சிறப்பாக செயல் பட்டார். ஆனால், கேப்டன் கும்ளே கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்சிலும் சேர்த்து ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியாமல் தவிப்பது பலவீனம்.

பாண்டிங் பலம்: ஆஸ்திரேலிய அணியின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த மாத்யூ ஹைடன் முதல் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தார். இவருடன் துவக்க வீரராக வந்த காடிச் சிறப்பாக விளையாடினார். கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி பெங்களூருவில் சதம் கடந்து அணிக்கு வலுவான ஸ்கோர் பெற்று தந்தனர். இவர்கள் இருவரையும் விரைவில் வெளியேற்றாவிட்டால் சிக்கல் தான். எதிர்கால கேப்டனாக கருதப்படும் மைக்கேல் கிளார்க் பார்மின்றி தவிப்பது பின்னடைவு.

சிடில் அறிமுகம்:பந்துவீச்சில் பிரட் லீ அசத்தினாலும், முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் தலா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் சண்டிகர் லயன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவமும் இவருக்கு கைகொடுக்கலாம். ஸ்டூவர்ட் கிளார்க் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பீட்டர் சிடில் அறிமுகமாகிறார்.மொகாலியில் வெற்றி கணக்கை துவக்கி தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் இந்திய வீரர்கள் முழு திறமையையும் பயன்படுத்தினால் ஆஸ்திரேலியாவை எளிதாக சமாளிக்கலாம்.

இன்னொரு சாதனை: டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற லாராவின் (11,953) சாதனையை முறியடிக்க இந்தியாவின் சச்சினுக்கு (11,939) இன்னும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. டெஸ்ட்(39) மற்றும் ஒரு நாள் போட்டிகளில்(42) அதிக சதம் கடந்த வீரர், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்(16,361) எடுத்தவரான சச்சின் இன்று 4வது சாதனைக்கு தயாராக இருக்கிறார்.



முதல் முறை: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மொகாலியில், டெஸ்ட் போட்டி ஒன்றில் மோதுவது இதுவே முதல் முறை. இங்கு இந்திய அணி 7 டெஸ்டில் பங்கேற்று 2 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. நான்கு டெஸ்ட் "டிரா'வில் முடிந்துள்ளது.

ஆடுகளம் எப்படி?: வழக்கமான இந்திய ஆடுகளங்களில் இருந்து மொகாலி மைதானம் சற்று வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் துவக்கத்தில் வேகங்களுக்கு சாதகமாக இருக்கும். பின்னர் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக மாறிவிடும். இதனால் முதல் 10 ஓவர்களில் கவனமாக விளையாடினால், மிகப் பெரிய ஸ்கோரை எட்டலாம்.

மழை வாய்ப்பு?: மொகாலியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. ஆனாலும் இன்று வானிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என தெரிகிறது. வெயில் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. மாலையில் மேகமூட்டம் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசும் இருக்கும். மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

கும்ளே சந்தேகம்: தோள்பட்டை காயம் முழுமையாக குணமடையாத நிலையில் கும்ளே இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,"" தோள்பட்டை காயம் நன்றாக குணமடைந்து வருகிறது. இரண்டாவது டெஸ்டில் விளையாடுவேனா... இல்லையா... என்பது கடைசி நேரத்தில் தான் தெரியும். மொகாலி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் கைகொடுக்கும் என நம்பலாம். ஆஸ்திரேலிய அணியில் வார்ன் இல்லாதது பின்னடைவு,'' என்றார்.


செய்தி : தினமலர்

0 comments: