Monday, September 1, 2008

பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவை இங்கிலாந்து அணி வென்றது

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' போட்டிகளில் விளையாடுகிறது. பாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் டான்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்தியாவின் சுலக்ஷனா நாயக்(0), ஜெயா சர்மா(0) என மோசமான துவக்கம் தந்தனர். அடுத்து வந்த தேவிகா பால்சிகார்(4), அமித் சர்மா(6) என தொடர்ந்து சொதப்ப, இந்திய அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி 53 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மிதாலியுடன் ஜோடி சேர்ந்த மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய பெண்கள் அணி 45.1 ஓவரில் 102 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் ஹோலி கால்வின் 4 விக்கெட்டுகளையும், கத்தரின் புரூன்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து பெண்கள் அணிக்கு சராக் டெய்லர்(75), கரோலின் அட்கின்ஸ்(24) ஜோடி அருமையான துவக்கம் தந்தனர். இவர்கள் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 24.3 ஓவரில் 103 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. துல்லியமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் கத்தரின் புரூன்ட் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

0 comments: