Saturday, March 22, 2008

சீனியர்களை சீண்டுகிறார் தோனி!: முன்னாள் வீரர்கள் பாய்ச்சல்

இந்திய அணியில் சீனியர்ஜூனியர் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் சீனியர்கள் நீக்கப்பட்டதை கேப்டன் தோனி நியாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு அஜித் வடேகர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில் சீனியர்களை தேவையில்லாமல் சீண்டுவதாக காட்டமாக கூறியுள்ளனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடந்த டுவென்டி20', முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு சீனியர் வீரர் களான சவுரவ் கங்குலி, டிராவிட், லட்சுமண் போன்றோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். சச்சின் மட்டுமே தப்பினார். இப்படி மூத்த வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டதற்கு ஒரு நாள் அணியின் கேப்டன் தோனி தான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.

முதலில் நடந்த டுவென்டி20' போட்டியில் இளம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. உடனே வீரர்கள் தேர்வு குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஆனால் முத்தரப்பு தொடரில் தோனியின் அணி எழுச்சி கண்டது. முதலிரண்டு பைனல்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது. இது இளமைக்கு கிடைத்த வெற்றி என்று தோனி பெருமிதமாக கூறினார். அப்போது சீனியர் களின் பங்கை மறந்துவிட வேண்டாமென சச்சின் எச்சரித்தார். இந்த பிரச்னை முடிந்து விட்டதாக நினைத்த போது, மீண்டும் சீனியர்களை வம்புக்கு இழுத்துள்ளார் தோனி.


இது குறித்து இவர் அளித்த பேட்டி: ஒரு நாள் போட்டிக்கான அணியில் யார்...யார் இடம் பெற வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந் தேன். எனது விருப்பத்தை தேர்வாளர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் நான் எதிர்பார்த்த அணியை தேர்வு செய்தார்கள். இக்கட்டான நேரத்தில் சீனியர்கள் நீக்கப் பட்டதாக விமர்சித்தார்கள். ஆனால் முத்தரப்பு தொடரில் கோப்பை வென்ற பிறகு, எனது முடிவு சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. விமர்சிப்பவர்கள் அணிக்கு ஆதரவு தருகிறார்களா? அல்லது தனிப்பட்ட சில வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களா? என்று தெரியவில்லை.

மாபெரும் சாதனை: ஒரு கட்டத்தில் இளம் அணியின் திறமை பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பை வென்று சாதித்தோம்.
இனியாவது எங்களது ஆட்டத்தை பாராட்டலாமே? துவக்கத்தில் நடந்த டுவென்டி20' போட்டியில் மிக மோசமாக தோல்வி அடைந்தோம் என்றால்... முத்தரப்பு தொடரில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றோம். வலிமையான ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணில் வைத்து தொடர்ந்து இரண்டு பைனல்களில் வென்றதை மாபெரும் சாதனையாக கருதுகிறேன்.

ஆக்ரோஷ திட்டம்: ஆஸ்திரேலிய அணி, இந்தியா வந்த போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டோம். இதனை ஆஸ்திரேலிய பயணத்திலும் அப்படியே தொடர்வது என முன்கூட்டியே திட்டமிட் டோம். அவர்களுக்கு எதிராக ஒரு இன்ச்' கூட விட்டுக் கொடுக்க கூடாது என முடிவு செய்தோம். இதற்கேற்ப அணியில் உள்ள சில வீரர்கள் வார்த்தை போரில் தாங்களும் சளைத் தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். அதே நேரத்தில் தங்களது கவனம் எவ்விதத்திலும் சிதறாமல் பார்த்துக் கொண் டார்கள். சிலர் அதிகம் பேசாமல் காரியத்தில் மட்டும் கவனமாக இருந்தார்கள்.

வெற்றி தொடரும்: ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றியை மட்டும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அணியின் தரத்தை உயர்த்த வேண்டும். வரும் போட்டிகளிலும் வெற்றிநடையை தொடர வேண்டும். இவ்வாறு தோனி கூறினார். இவரது இந்த பேட்டி தான் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 26ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது.

இதில் முத்தரப்பு தொடரில் நீக்கப்பட்ட டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். இந்த நேரத்தில் சீனியர்களை பற்றி தேவையில்லாமல் தோனி பேசியுள்ளதாக கூறப் படுகிறது. ஒரு நாள் கேப்டன் என்ற முறையில் இவர் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என முன்னாள் இந்திய வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

அஜித் வடேகர்( முன்னாள் கேப்டன்): சீனியர்களின் ஆட்டத்தை பார்த்து வளர்ந் தவர் தான் தோனி. அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக் களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. அணியின் வளர்ச்சியில் மூத்த வீரர்களின் பங்கு மகத்தானது. இதனை வளரும் தலைமுறையினர் புரிந்து கொண்டு உரிய மதிப்பு அளிக்க வேண்டும். தோனியின் கருத்துக்களால் சீனியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை.



பிஷன் சிங் பேடி(முன்னாள் கேப்டன்): சீனியர்கள் பற்றிய தோனியின் கருத்துக்கள் அணியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கேப்டனாக இவர் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டும். தான் நினைப்பதை வெளிப்படையாக பேசுவதை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருப்பதில் தவறு எதுவும் இல்லை என்பதை தோனி புரிந்து கொள்வது மிகவும் அவசியம்..




மன்சூர் அலி கான் பட்டோடி (முன்னாள் கேப்டன்): தோனி போன்ற வீரரிடம் இருந்து இத்தகைய கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை. கேப்டன் தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். தற்போது தான் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். போகப் போக நிதானமாக பேசுவார் என எதிர்பார்க்கலாம்.



கங்குலிக்கு வாய்ப்பு: இதற்கிடையே சீனியர் வீரர்களின் பங்களிப்பை மறந்துவிட வேண்டாமென தேர்வாளர் களை சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சச்சினை மறக்கலாமா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு பைனலில் 34 வயதான சச்சினின் ஆட்டத்தை தோனி மறந்து விட்டாரா? என்று சீனியர்கள் தரப்பில் கேள்வி எழுப்பபட்டுள்ளது. சிட்னியில் நடந்த முதல் பைனிலில் 117 ரன் எடுத்து வெற்றிக்கு துணாக நின்றார். பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது பைனலில் 91 ரன் எடுத்தார். இளம் வீரர்களில் காம்பிர் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக பேட் செய்தார். சீனியர், ஜூனியர் இணைந்து தான் வெற்றிக்கு வழி வகுத்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.

பி.சி.சி.ஐ., ஆதரவு: சீனியர்களை விமர்சித்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,கேப்டன் என்ற முறையில் எந்த பிரச்னை பற்றியும் பேசும் உரிமை தோனிக்கு உண்டு. வீரர்களை தேர்வாளர்கள் தான் தேர்வு செய்கிறார்கள். இதில் கேப்டன் தலையிட வாய்ப்பு இல்லை,'' என்றார். செயலர் நிரஞ்சன் ஷா கூறுகையில்,தோனி தெரிவித்த கருத்துக்கள் வேறுவிதமாக வெளியிடப்பட்டிருக்கலாம். இது பற்றி தெளிவாக அறிந்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும்,'' என்று கூறி நழுவினார்.

செய்தி : தினமலர்